அரசாங்கத்தின் நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில், பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க வேண்டும் என்பது பெரும்பாலான இலங்கையர்களின் விருப்பமாகவுள்ளதாக சுயாதீன ஆய்வொன்றின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கு அமைய, 62.4 வீதமானவர்கள் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
நாட்டின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் பொறுப்புக்கூற வேண்டும் என 18.4 வீதமானவர்கள் எண்ணுகின்றனர்.
இந்த கருத்துக் கணிப்பிற்கு அமைய 40.3 வீதமானவர்கள் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு, 35.7 வீதமானவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
24 வீதமானவர்கள் இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
இந்த கருத்துக் கணிப்பிற்கு அமைய, இலங்கை சனத்தொகையில் 25 வீதமானவர்களுக்கும் குறைவானவர்களுக்கே அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் புரிந்துணர்வு உள்ளது.
அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் தாம் அறியவில்லை என பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் தேசிய அரசாங்கமொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையம் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது.
இதற்கு 56.45 வீதமானவர்கள் ஆம் என்ற பதிலை வழங்கியுள்ளனர்.



